பாளையங்கோட்டையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை திறந்ததால் பரபரப்பு 3 ஊழியர்கள் மீது வழக்கு
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
நெல்லை,
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டாஸ்மாக் கடை
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கால கட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதை மீறி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வோரை போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர். சில இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனாலும் மதுபாட்டில்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.150 மதிப்புள்ள குவாட்டர் மதுபாட்டில் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் சார்பிலே பாட்டில்கள் வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
இதையொட்டி டாஸ்மாக் நிர்வாகம், பாதுகாப்பு இல்லாத கடைகளில் உள்ள சரக்குகளை அங்கிருந்து எடுத்து குடோனுக்கு கொண்டு செல்வதாக கூறி கடைகளை காலி செய்து வருகின்றனர்.
நள்ளிரவில்...
இந்த நிலையில் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் டாஸ்மாக் கடையை காலி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஒரு காரில் 2 பேர் அந்த கடைக்கு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றனர். அவர்கள் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடை திறந்திருக்க என்ன காரணம்? என்று விசாரிக்க சென்றனர்.
போலீசாரை கண்டதும் கடையை மூடி விட்டு 2 பேரும் காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த டாஸ்மாக் கடையை சேர்ந்த மேற்பார்வையாளர் மேகலிங்கராஜ், விற்பனையாளர்கள் ஆறுமுகம், காளிராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.