கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர்

கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து, ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர்.

Update: 2020-04-29 00:48 GMT
அருமனை, 

கலெக்டர் அறிவிப்பை தொடர்ந்து, ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர்.

ரப்பர்

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே ரப்பர் பயிரிடப்படுகிறது. இது மலையோரப்பகுதியில் உள்ள ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ரப்பர் பயிரிடப்படுகிறது. இதில் தனியார் தோட்டங்கள் முதல் சிறு, குறு விவசாயிகள் வரை ரப்பர் பயிரிட்டு வருகின்றனர்.

ரப்பர் பால் வெட்டும் தொழிலில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் ரப்பர் இலை உதிர்வதால் ஓய்வு அளிக்கப்படுகிறது. அதன்பின் மார்ச் மாதம் பால் வெட்டும் தொழில் தொடங்கும்.

ஊரடங்கு உத்தரவு

ஆனால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மளிகைக்கடை, மருந்துக்கடை, காய்கறி கடை உள்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற பணிகள் நடைபெறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கினார்கள்.

கலெக்டர் அறிவிப்பு

இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘குமரி மாவட்டத்தில் ரப்பர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது ரப்பர் தோட்டங்களில் உள்ளூர் பால்வெட்டும் தொழிலாளிகள் மூலம் ரப்பர் பால் எடுக்கும் பணியை மேற்கொள்ளலாம். அப்போது சமூக இடைவெளி விட்டு தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்‘ என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் திரும்பினார்கள். அவர்கள் முக கவசம் அணிந்து தொழிலில் ஈடுபட்டனர். கடந்த 4 மாதமாக தொழில் இல்லாமல் இருந்த பால்வெட்டும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்