கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 14 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. இது வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் சாம்ராஜ்நகர், கொப்பல், சிக்கமகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராமநகர், ஹாசன், சிவமொக்கா, ஹாவேரி, யாதகிரி, கோலார், தாவணகெரே, உடுப்பி மற்றும் குடகு ஆகிய 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் இந்த 14 மாவட்டங்களும் பசுமை மண்டலத்தில் உள்ளன. மேலும் 8 மாவட்டங்களில் ஒரு சில தாலுகாக்களில் மட்டும் கொரோனா பாதிப்பு உள்ளது.
பெங்களூரு, மைசூரு உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் இவை சிவப்பு மண்டலத்தில் உள்ளன. இதற்கிடையே கட்டுமான தொழில், இரும்பு, இரும்பு தாது உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொழிற்சாலைகளை திறக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் பசுமை மண்டலத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், ஊரடங்கை தளர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தொழிற்பேட்டைகள்
”கொரோனா பாதிப்பு இல்லாத பசுமை மாவட்டங்களான சாம்ராஜ்நகர், கொப்பல், சிக்கமகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராமநகர், ஹாசன், சிவமொக்கா, ஹாவேரி, யாதகிரி, கோலார், தாவணகெரே, உடுப்பி மற்றும் குடகு ஆகிய 14 மாவட்டங்களில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்படுகிறது.
அதன்படி மேற்கூறிய மாவட்டங்களில் கிராமப்புறத்தில் மட்டும் தொழிற்சாலைகள் செயல்படலாம். அதாவது உற்பத்தி நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், தொழில் நகரங்கள் இயங்கலாம். ஆனால் இந்த நிறுவனங்கள் முடிந்தவரை தொழிலாளர்களை நிறுவன வளாகத்திற்கு உள்ளோ அல்லது அருகிலோ தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
50 சதவீத ஊழியர்கள்
தொழிலாளர்களை அழைத்து வர தனி வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சமூக விலகலை தொழிலாளர்கள் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த 14 மாவட்டங்களில் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. 50 சதவீத ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
பல்லாரி, மண்டியா, பெங்களூரு புறநகர், கதக், துமகூரு, சிக்பள்ளாப்பூர், உத்தர கன்னடா, தார்வார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத தாலுகாக்களில் கடைகள் திறப்பு மற்றும் தொழில் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் முடிவு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், பெலகாவி, மைசூரு, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கலபுரகி, பீதர், தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 3-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.”
இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் மகிழ்ச்சி
ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்டங்களில் தியேட்டர்கள், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளை திறக்க அனுமதி இல்லை. அதுபோல் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட அதிகம்பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் மறு உத்தரவு வரும்வரை அனுமதி இல்லை. பொதுமக்கள் முக கவசம் அணியவும், எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்களுக்கு இந்த ஊரடங்கு தளர்வு செய்தி மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. பிற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும், இயல்பு வாழ்க்கை திரும்புவோம் என்ற நம்பிக்கையை கொடுத்து உள்ளது.