தஞ்சை அருகே வாழைத்தோப்பில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது 300 லிட்டர் ஊறல் கைப்பற்றி அழிப்பு
தஞ்சையை அடுத்த கூடலூர் பகுதியில் வாழைத்தோப்பில் சாராயம் ஊறல் பதுக்கி வைத்து காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கூடலூர் பகுதியில் வாழைத்தோப்பில் சாராயம் ஊறல் பதுக்கி வைத்து காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் ஆகியோர் அடங்கிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள வாழைத்தோப்பில் பேரலில் 300 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கூடலூரை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 35), பிரகாஷ்(29) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சாராய ஊறல் மற்றும் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை போலீசார் தஞ்சை மதுவிலக்குப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் மதுவிலக்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.