நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 போலீசாருக்கு கொரோனா

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் கயிறுகளை கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது

Update: 2020-04-28 22:45 GMT
சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தான் உதவி கமிஷனர் அலுவலகமும் உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதே காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றி வரும் மாநில உளவுப்பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த போலீசார்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாருக்கு பரிசோதனை

இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு செல்ல பயந்த அவர்கள், போலீஸ் நிலையம் அருகே உள்ள பூட்டப்பட்டிருந்த கடைகளின் முன்பு உள்ள படிக்கட்டுகளில் ஆங்காங்கே தனித்தனியாக முககவசத்துடன் அணிந்தவாறு அமர்ந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் 70-க்கும் மேற்பட்ட போலீசார்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.

எனினும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முடிவு இன்று(புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தநிலையில் ஒரு வார கால இடைவெளியில் அதே போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கயிறு கட்டப்பட்டது

இதற்கிடையே நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கயிறுகள் கட்டப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. அங்கு தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த இடத்தை தாண்டி பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பள்ளிச் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், மேலும் 2 பேர் என கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஜி.பி. அலுவலகத்திலும் கொரோனா பீதி

மாநில உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான உளவுப்பிரிவு போலீசார், டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று தினந்தோறும் அதிகாரிகளை சந்திப்பது வழக்கம்.

இதனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் கொரோனா பீதி தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போலீசாரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்