ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் வீட்டுக்கு தப்பி ஓட்டம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர், வீட்டுக்கு தப்பி ஓடினார். அவரை பிடிக்க முயன்ற போலீசாரை கட்டிப்பிடித்து விடுவேன் என்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-28 22:32 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி, நடந்தே தனது வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கட்டிப்பிடித்து விடுவேன் என மிரட்டல்

இதையடுத்து பேசின்பிரிட்ஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த நபர், போலீசாரை பார்த்து, என்னை பிடிக்க அருகில் வந்தால் கட்டிப் பிடித்து விடுவேன் என்று மிரட்டினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டினர். இரவு முழுவதும் அவர் எங்கும் தப்பி விடாமல் அங்கேயே காவலுக்கு நின்றனர்.

நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் போலீசார் பாதுகாப்பு கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்று அவரை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்