திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 26 பேர் வீடு திரும்பினர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 26 பேர் வீடு திரும்பினர்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 53 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில் நேற்றுமுன்தினம் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 27 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மாங்காட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் உறுதியானது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவரது கடைக்கு வந்து சென்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள 6 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு மாங்காடு பேரூராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோயம்பேடு மற்றும் சென்னைக்கு சென்று வருபவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பதால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயில்களை மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சென்னையில் இருந்து மாங்காடு மற்றும் குன்றத்தூர் வழியாக வரும் எல்லைகளான மாங்காடு, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், குன்றத்தூர் நான்கு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.