ஊரடங்கால் வாகனங்கள் ஓடவில்லை: பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு
ஊரடங்கால் வாகனங்கள் ஓடாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையான சரிவை சந்தித்து உள்ளது.
தூத்துக்குடி,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பஸ், ஆட்டோக்கள், லாரி, வேன், கார்கள் ஓடவில்லை. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வ.உ.சி. துறைமுகம் அத்தியாவசிய பணிகள் அடிப்படையில் இயங்கி வருகிறது. இங்கிருந்து குறைந்த அளவிலான லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்கின்றன.
சரக்கு வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஊரடங்குக்கு முன்பு ஒரு மாதத்தில் 6 ஆயிரத்து 413 கிலோ லிட்டர் பெட்ரோலும், 17 ஆயிரத்து 982 கிலோ லிட்டர் டீசலும் விற்பனையாகி வந்தது. இந்த நிலை ஊரடங்குக்கு பிறகு தலைகீழாக மாறிவிட்டது. பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பதால், பெட்ரோல், டீசல் விற்பனை மூன்றில் ஒரு பங்காக குறைந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ லிட்டராகவும், டீசல் விற்பனை சுமார் 6 ஆயிரம் கிலோ லிட்டராகவும் குறைந்து உள்ளது.
பொதுவாக துறைமுகத்துக்கு வரும் லாரிகளால் அதிக அளவில் டீசல் விற்பனை நடந்து வந்தது. தற்போது துறைமுகம் இயங்கி வந்தாலும், லாரிகள் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. அந்த லாரி உரிமையாளர்களும் பல சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து பெரும்பாலும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் மாலை 6 மணிக்கு பிறகே வெளியில் வருகின்றன. அதன்பிறகு தான் அந்த லாரிகள் டீசல் நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்கின்றன. இதனால் டீசல் நிரப்புவதில் லாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் லாரிகள் இயக்குவதற்கான அனுமதி சீட்டை பெட்ரோல் பங்க்கில் காண்பித்தாலும், டீசல் நிரப்புவதற்கு தயங்குகின்றனர். மதியம் 1 மணிக்கு பிறகு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்பினால், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சரக்குகளை ஏற்றிய லாரிகள் டீசல் நிரப்புவதற்காக காலை 6 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உரிய நேரத்தில் இலக்கை அடைய முடியாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அனுமதி பெற்ற லாரிகளுக்கு எந்த நேரத்திலும் டீசல் நிரப்புவதற்கு போலீசாரும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அனுமதி
அதே நேரத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும்போது, “லாரி உரிமையாளர்கள் லாரி இயங்குவதற்கான அனுமதி சீட்டை காண்பிக்கின்றனர். அதன்படி அந்த லாரிகளுக்கு டீசல் நிரப்பினாலும், போலீஸ் நெருக்கடி அதிகமாக உள்ளது. ஆகையால் துறைமுகத்தில் இருந்து இரவு நேரங்களில் வரும் லாரிகளுக்கு டீசல் நிரப்புவதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
லாரி உரிமையாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் தாமதமின்றி உரிய இலக்கை அடைய வாய்ப்பாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.