பெரம்பலூரில் 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
பெரம்பலூரில் 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதன்முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே குணமடைந்துள்ளார். மீதமுள்ள 6 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் சிறுவன் ஒருவனும், துறைமங்கலத்தில் தீயணைப்பு வீரரும், கல்லூரி மாணவர் பாதிக்கப்பட்டிருந்ததால், கலெக்டர் சாந்தா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளுக்கு 3 நாள் முழு ஊரடங்கு கடந்த 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-வது நாளாக கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கிலும் மருந்தகம், மருத்துவமனைகள், பால் பண்ணை ஆகியவற்றை தவிர காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, மளிகை கடை, உணவகம் மற்றும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
வங்கிகளும் மூடல்
நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. முழு ஊரடங்கு அமலில் இருந்த பகுதிகளில் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் ஏ.டி.எம். மையங்கள் மூடப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதற்காக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கு செய்யப்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் இரு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி, அவர்களை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும் முழு ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. வீட்டில் முடங்கிய பொதுமக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடின்றி தாயம், சீட்டு, கேரம் போர்டு விளையாடி மகிழ்ந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கமான ஊரடங்கு உத்தரவு பெரம்பலூரில் அமலில் இருக்கும்.