கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
சாராய ஊறல் அழிப்பு
கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கறம்பக்குடி தாசில்தார் சேக்அப்துல்லா, வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜப்பா மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது புதுவிடுதி கள்ளியடிபட்டியில் விவசாய தோட்டத்தில் இருந்த 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்கள், பாத்திரங்கள் போன்றவை கண்டறியப்பட்டன. இதையடுத்து சாராய ஊறலை கைப்பற்றி அழித்த போலீசார் இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கறம்பக்குடி பகுதியில் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்பது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தைல மரக்கட்டைகள் கடத்திய 5 பேர் கைது
*கந்தர்வகோட்டை அருகில் பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான தைல மரங்களை துவார் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் விலைக்கு வாங்கி அந்த மரங்களை வெட்டி மரக்கட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது போலீசார் தைல மரக்கட்டைகள் கொண்டு செல்ல அனுமதி சீட்டு உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் பெரியகோட்டை கிராம நிர்வாக அதிகாரி வழங்கியதாக சான்று ஒன்றை காட்டினர்.
இதையடுத்து போலீசார் கிராமநிர்வாக அதிகாரி முனியப்பனிடம் கேட்டபோது தான், அப்படி ஒரு சான்றை யாருக்கும் வழங்கவில்லை என்று கூறினார். இதுகுறித்து கிராமநிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், போலி ஆவணம் தயாரித்து தைல மரக்கட்டைகள் கடத்தியதாக சண்முகராஜ் (வயது 60), ஜெயராமன் (38), செல்வம் (30), கேசவன் (43), அறிவுச்செல்வன் (38) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகம்மாள் கோவில் திருவிழா ஒத்திவைப்பு
*திருவரங்குளம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தில் அழகம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்பட்டு மற்றொரு தேதியில் இந்த ஆண்டு திருவிழா நடைபெறும் என்று விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.