கொரோனா தடுப்பு நடவடிக்கை தற்காலிக சிறையாக மாறிய அரசு பள்ளி, கல்லூரி

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளது.

Update: 2020-04-28 02:33 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய குற்ற வழக்கில் பிடிபட்டவர்கள் மட்டும் அங்கு அடைக்கப்பட்டனர். ஏற்கனவே சாதாரண வழக்குகளில் சிறையில் இருந்த விசாரணை கைதிகள் அனைவரும் கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

க்ஷஅங்குள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அவ்வப்போது மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புதிய குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்போது நோய் தொற்று அபாயம் இருந்தால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் அரசுடன் ஆலோசித்தது.

இதற்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதை ஒட்டியுள்ள இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகுப்பறைகள் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளன.

24 மணி நேர பாதுகாப்பு

இதற்காக பள்ளியில் இருந்து 6 அறைகளும், கல்லூரியில் இருந்து 6 அறைகளும் கைதிகளின் அறைகளாக மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தற்காலிக சிறைச்சாலை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அங்கு ஒரு சிறைத்துறை சீனியர் வார்டன், 2 சிறை வார்டன்கள் என 3 பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதுதவிர ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளியின் வெளிப்புற இரு நுழைவு வாயிலும் மூடப்பட்டு அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக

கொலை, திருட்டு, வெடிகுண்டு, கடத்தல் உள்ளிட்ட பெரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் குற்றவாளிகளை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடும் பட்சத்தில் அவர்கள் முதல்கட்டமாக தற்காலிக சிறையில் அடைக்கப்படுவார்கள். 15 நாட்களுக்கு பின் மீண்டும் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படும்போது நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டால் உடனடியாக அந்த கைதி காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றப்படுவார்கள்.

புதிதாக அடைக்கப்படும் விசாரணை கைதிகளை கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் கதிர்காமம் அரசு பள்ளி, கல்லூரியை தற்காலிக சிறையாக மாற்றியதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்