கோடை வெயிலுக்கு இதமாக ஊரடங்கு உத்தரவை மீறி ஆறுகளில் ஆனந்த குளியல்

கோடை வெயிலுக்கு இதமாக ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆறுகளில் பலர் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

Update: 2020-04-28 01:09 GMT
தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பாகவே சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கும்பக்கரை அருவி, சுருளி அருவி, சோத்துப்பாறை அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, ஹைவேவிஸ் மலைப்பகுதி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் காலங்களில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதும். இந்த முறை ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதே நேரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்க ஆறுகளுக்கு பலரும் குளிக்கச் செல்கின்றனர்.

ஆறுகளில் ஆனந்த குளியல்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. ஆனால், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் முல்லைப்பெரியாற்றிலும், குன்னூர் வைகை ஆற்றிலும் குளிப்பதற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பலர் வந்து செல்கின்றனர். ஆறுகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். வாலிபர்கள் பலர் ஆற்றங்கரையில் மீன் பிடிப்பது, தண்ணீருக்குள் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி உள்ள நிலையில், மக்கள் சில நாட்களுக்கு ஆறுகளின் பக்கம் வராமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, காலை நேரங்களில் ஆறுகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க அரசு துறை அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்