கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறந்தது முளகுமூடு ரேஷன் கடையில் முண்டியடித்த மக்கள்
முளகுமூடு அருகே கொரோனா விழிப்புணர்வு இன்றி ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டு முண்டியடித்தபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்மநாபபுரம்,
முளகுமூடு அருகே கொரோனா விழிப்புணர்வு இன்றி ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டு முண்டியடித்தபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு இன்றி...
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள், நிவாரண பொருட்களை பெறுபவர்கள் என அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எவ்வளவு தான் கூறினாலும், சில இடங்களில் கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறக்கத்தான் செய்கிறது. அந்த இடங்களில் பொதுமக்கள் முண்டியடித்தபடி பொருட்கள் வாங்கி செல்வதை காணமுடிகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க வந்தவர்கள் கொரோனா விழிப்புணர்வை மறந்து நெருக்கமாக நின்ற சம்பவம் நடந்துள்ளது.
முண்டியடித்த மக்கள்
அதாவது, முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட குருவிகாட்டுவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று மண்எண்ணெய் வழங்கப்பட்டது. அப்போது மண்எண்ணெய் வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்தபடி இருந்தனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று எவ்வளவோ அறிவுரை கூறினாலும் பொதுமக்கள் அதனை கடைப்பிடிக்காதது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.