எல்லையில் மண்ணை குவித்து குமரி-கேரளாவை இணைக்கும் கிராமப்புற சாலைகள் அடைப்பு கொரோனா பரவலை தடுக்க தமிழக போலீசார் நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் எல்லையில் மண்ணை குவித்து குமரி- கேரளாவை இணைக்கும் கிராமப்புற சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
களியக்காவிளை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் எல்லையில் மண்ணை குவித்து குமரி- கேரளாவை இணைக்கும் கிராமப்புற சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலத்தில் பரவியது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அந்த சமயத்தில், தமிழகத்தில் பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது.
கேரளாவில் இருந்து கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, கேரள- மாநில எல்லையை அடைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களிடம் கெடுபிடி சோதனையும் நடத்தப்பட்டது.
எல்லையில் கெடுபிடி
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபடி கட்டுக்குள் வந்தது. ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து கேரள மாநில அரசு, தமிழக எல்லையை மூட நடவடிக்கை எடுத்தது. மேலும், எல்லையில் உள்ள தமிழக மக்களிடம் கேரள போலீசார் கெடுபிடி காட்டினர். அதன்படி, தமிழக மக்கள் கேரளாவுக்கு நுழையாத வகையில் தடுப்பு வேலிகளை அமைத்தனர்.
கிராமப்புற சாலைகள் அடைப்பு
இந்தநிலையில் குமரி-கேரள எல்லையை இணைக்கும் கிராமப்புற சாலை வழியாக இருமாநில மக்களும் சர்வசாதாரணமாக சென்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வந்து கொண்டே தான் இருந்தது. கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்டத்தில் புதிதாக தொற்று எதுவும் ஏற்படாமல், தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளது. எனவே, எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் நிலவியது.
இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் கிராமப்புற சாலைகளை அடைக்கும் பணியில் குமரி போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, குமரி-கேரள எல்லையில் பளுகல், களியக்காவிளை, தேவிகோடு, செறுவநல்லூர், புலியூர்சாலை உள்ளிட்ட பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கேரளாவை இணைக்கும் பாதைகள் அதிக அளவில் உள்ளன. இந்த பாதையை அடைக்கும் பணியில் தற்போது குமரி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு
குன்னக்கால் உள்ளிட்ட கிராமப்புற சாலையில் மண்ணால் குவித்து வைக்கப்பட்டு அடைக்கப்பட்டன. இருமாநில எல்லை பகுதியிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டதால், எல்லையில் உள்ள தமிழக மக்களும், கேரள மக்களும் பரிதவிக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட செல்ல முடியாத நிலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற கெடுபிடியால் ஆம்பாடியில், கேரள மாநில போலீசாரிடம் தமிழக மக்கள் வாக்குவாதத்தில் நேற்று ஈடுபட்டதையும் காண முடிந்தது.
ஆனால், இதுபோன்ற கெடுபிடி இருந்தால் தான் குமரியில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும், அரசின் நடவடிக்கையை பொதுமக்களும் கடைபிடித்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி அடைய ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர்.