போலீசார் மீதான தாக்குதலுக்கு வருந்துகிறோம்: கிராம மக்களை தொந்தரவு செய்யக்கூடாது போலீஸ் சூப்பிரண்டிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் மனு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீதான தாக்குதலுக்கு வருந்துகிறோம் எனவும், கிராம மக்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீஸ் சூப்பிரண்டிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.

Update: 2020-04-28 00:45 GMT
நாகர்கோவில், 

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீதான தாக்குதலுக்கு வருந்துகிறோம் எனவும், கிராம மக்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீஸ் சூப்பிரண்டிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் மனு

குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் ஸ்டீபன், முள்ளூர்த்துறை பங்கு தந்தை கிறிஸ்து ராஜ், அருட்பணியாளர் ராஜ் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் முள்ளூர்த்துறை பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாக்குதலுக்கு வருத்தம்

கொரோனா என்ற வைரஸ் நோயை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையின் தன்னலம் இல்லாத பணியை பாராட்டி, நன்றி தெரிவித்து கொள்கிறோம். கடந்த 25-ந் தேதி முள்ளூர்த்துறையைச் சேர்ந்த மக்கள் காவல் துறையினர் மீது எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலுக்காக வருந்துகிறோம்.

இந்த பிரச்சினை தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரச்சினையில் தொடர்பு கிடையாது. இதனால் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரச்சினையில் இல்லாமல் இருந்தால் அவர்களுடைய பெயரையும் நீக்க வேண்டும். தேவை இல்லாமல் கிராம மக்களை தொந்தரவு செய்யக்கூடாது.

வீடுகள், வாகனங்கள் சேதம்

முள்ளூர்த்துறை ஊர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதால் சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறு செய்தவர்கள் ஒருவேளை பக்கத்து கிராமங்களில் தஞ்சம் அடைந்திருந்தால் அந்த கிராம மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது நல்லது.

காவல்துறையினரால் முள்ளூர்த்துறை ஊரில் உள்ள ஏராளமான வாகனங்கள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்