வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்: நாம் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - டி.கே.சிவக்குமார் பேட்டி
“வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், நாம் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் கவச உடைகள் உள்பட தற்காப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு, அந்த தற்காப்பு உபகரணங்களை வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“நான் தூங்கி கொண்டிருப்பதாக மந்திரி ஈசுவரப்பா சொல்கிறார். நான் எங்கே தூங்கி கொண்டிருக்கிறேன் என்பதை அவர் சொல்ல வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் (நரேகா) ஊழல் நடந்திருப்பதால், அதுகுறித்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நரேகா திட்டத்தை அமல்படுத்தியது.
இத்தகைய நெருக்கடியான சூழலில் இந்த திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுத்தால் அது அவர்களின் குடும்பங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு நான் ஆலோசனை கூறினேன். இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயார். நரேகா திட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறினேன்.
சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு தற்காப்பு கவச உபகரணங்களை வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இன்று(அதாவது நேற்று) ஒரு அடையாளத்திற்காக இந்த பணியை தொடங்கி வைத்துள்ளேன். நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பாதிப்புகள் அதிகம்
பாதிப்பு குறைந்துள்ளது என்று ஊரடங்கை தளர்த்தியுள்ளனர். ஆனால் நாம் உஷாராக இருக்க வேண்டும். வரும் காலத்தில் இந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிக பரிசோதனைகளை நடத்தினால், பாதிப்புகள் அதிகமாக இருப்பது தெரியவரும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் நாம் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.”
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.