கோவையில் 2-வது நாளாக முழு ஊரடங்கு தடையை மீறுபவர்கள் எண்ணிக்கை குறைந்தது

கோவையில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

Update: 2020-04-27 23:41 GMT
கோவை,

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வருகிற 29-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தவிர திருப்பூர் சேலம் மாநகராட்சிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி கோவை மாநகராட்சியில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாநகராட்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாநகர் முழுவதும் 22 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கோவையில் வெளியே வருபவர்களின் எண்ணிக்கை மற்ற நாட்களை ஒப்பிடுகையில் வெகுவாக குறைந்தது.

5 பேர் கைது

இதற்கு முன்பு ஊரடங்கின்போது தினமும் 600 முதல் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனால் நேற்று கோவை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி சென்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறியதாக 426 பேர் கைது செய்யப்பட்டனர். 357 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையின் பல்வேறு இடங்களில் உள்ளூர் போலீசாருக்கு உதவியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிரடிப்படையினரும் (எஸ்.டி.எப்.) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் எதையும் சாலைகளில் காண முடியவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

மேலும் செய்திகள்