உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கவர்னருக்கு மீண்டும் பரிந்துரை - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமியுங்கள் என கவர்னருக்கு மராட்டிய மந்திரிசபை மீண்டும் பரிந்துரை செய்து உள்ளது.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகியும் அரசியலமைப்பு விதியின்படி இன்னும் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி.யாகவோ ஆகாமல் இருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் அதாவது அடுத்த மாதம் (மே) 28-ந் தேதிக்குள் அவர் மேற்கண்ட இரண்டில் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வாக வேண்டும்.
கடந்த 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது பதவியை தக்கவைத்து கொள்ள உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரேக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
பரிந்துரை மீது தாமதம்
இதையடுத்து, கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி கடந்த 9-ந் தேதி மாநில மந்திரிசபை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது கவர்னர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார்.
இது உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது முதல்-மந்திரி பதவி தப்புமா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியையும், அவரை இயக்குவதாக பாரதீய ஜனதாவையும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சாடி வருகிறார்.
மீண்டும் மந்திரி சபை பரிந்துரை
இந்தநிலையில், நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் கடந்த 9-ந் தேதி மந்திரி சபை பரிந்துரை செய்தபடி உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கவர்னர் தாமதம் செய்வது பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக நியமிக்க கவர்னரை மீண்டும் கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கவர்னருக்கு மீண்டும் மந்திரி சபையின் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.
மராட்டியத்தில் வேகமெடுக்கும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் உத்தவ் தாக்கரே, மற்றொரு புறம் தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளார்.