மும்பையில் புதிதாக 395 பேருக்கு கொரோனா - இதுவரை 1,000 பேர் குணமடைந்தனர்
மும்பையில் புதிதாக 395 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை இங்கு 1,015 பேர் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.;
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதேபோல நாட்டில் பெருநகரங்களை பொருத்தவரை மும்பையில் தான் நோய் தொற்று அதிகளவில் உள்ளது.
மும்பையில் நேற்று புதிதாக 395 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 589 ஆகி உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 15 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் 219 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மீண்டவர்கள்
இதுதவிர நேற்று மும்பையில் 118 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி ஆஸ்பத்திாியில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இங்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுவரை 1,015 போ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும்...
இதேபோல மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் புதிதாக 522 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 590 ஆகி உள்ளது. இதேபோல ஒரேநாளில் மாநிலத்தில் 27 பேர் ஆட்கொல்லி வைரசுக்கு பலியானார்கள்.
இதுவரை மராட்டியத்தில் 369 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.