ஊரடங்கு காலத்தில் வேளாண் எந்திரங்களை வாடகையின்றி பயன்படுத்த சிறப்பு திட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி

ஊரடங்கு காலத்தில் வேளாண் எந்திரங்களை வாடகையின்றி பயன்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-04-27 23:15 GMT
அய்யம்பேட்டை,

ஊரடங்கு காலத்தில் வேளாண் எந்திரங்களை வாடகையின்றி பயன்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறப்பு திட்டம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் விவசாய பணிகளுக்கு அரசு விதி விலக்கு வழங்கி உள்ளது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஊரடங்கால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு, தனியார் டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து 90 நாட்களுக்கு வாடகை இன்றி வேளாண் எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள வேளாண் எந்திர வாடகை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

வேளாண் பணிகள்

செயலியில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரம், தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த சில நிமிடங்களில் பதிவு எண்ணும், வேளாண் பணிக்கான எந்திரங்கள் எந்த நாளில் வரும் என்பது தொடர்பான தகவலும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இந்த தகவலை அருகில் உள்ள வேளாண் எந்திர உரிமையாளருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைக்கும். அவர் பதிவு செய்த விவசாயியை தொடர்பு கொண்டு உழவு உள்ளிட்ட விவசாய பணிக்கான நாளை உறுதி செய்து கொள்வார். பதிவு செய்த நாளில் இருந்து 3 அல்லது 4 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வேளாண் பணிகள் செய்து தரப்படும்.

2 ஏக்கர் வரை...

இந்த திட்டத்தில் விவசாயிகள் 2 ஏக்கர் வரை பணிகள் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கான வாடகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்திர உரிமையாளர்களின் வங்கி கணக்கில் 15 நாட்களில் செலுத்தி விடும். உழவு பணி, நிலத்தை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளுக்கான 15 வகையான எந்திரங்களை இந்த திட்டத்தில் வாடகையின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் ஆகிய ஊர்களில் உழவு செயலியில் பதிவு செய்யப்பட்ட வயல்களில் நேற்று உழவு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆறுமுகம் பார்வையிட்டார். அப்போது டிராக்டர் உரிமையாளர் கிருஷ்ணகுமார் உடன் இருந்தார். ஊரடங்கு காலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-

அறுவடை எந்திரம்

ஊரடங்கு காலத்தில் சிறு, குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வாடகையின்றி உழவு செய்து கொடுக்கும் அரசுக்கும், டிராக்டர் நிறுவனத்துக்கும் விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். இதனால் சிறு, குறு விவசாயிகளின் சாகுபடி செலவில் ரூ.2,500 வரை மிச்சப்படுத்த முடியும்.

இந்த திட்டம் ஊரடங்கு காலத்தில் 90 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னரும் அரசு முழு பொறுப்பேற்று இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பவர் டில்லர், நடவு எந்திரம், அறுவடை எந்திரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்