டாக்டர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணம்
மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் டாக்டர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கோவில்பாப்பாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலான கொரோனா பாதுகாப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு அதிகாரியும், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான வனிதா தலைமை தாங்கி இந்த உபகரணங்களை வழங்கினார்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பத்மாவதி இதனை பெற்று கொண்டார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவப் பணியாளர்களும் கவனமாக இருக்கவேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும், ஊரடங்கு உத்தரவு சரிவர அமல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், குமார், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஷ் கண்ணன், மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.