திருத்தணி அருகே, குடிநீர் டேங்கரில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி விற்பனை - பெண் உள்பட 2 பேர் கைது

திருத்தணி அருகே குடிநீர் டேங்கரில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை பதுக்கி, அதன் மூலம் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-27 22:45 GMT
திருத்தணி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் சாராயம் விற்பனை தலை தூக்கி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பொன்பாடி மேட்டு காலனியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு கல்பனா உத்தரவின்பேரில் திருத்தணி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்கர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து சாராய ஊறல் வாசனை வந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த குடிநீர் டேங்கரை திறந்து பார்த்தனர். அதில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் டேங்கருடன் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதன் தொடர்பாக காசி நாதபுரத்தைச் சேர்ந்த ரவி (வயது 48) மற்றும் மேட்டு காலனியைச் சேர்ந்த சிவகாமி(28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிவிட்ட கோதண்டராமாபுரத்தை சேர்ந்த ஜார்ஜ்(40) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் ரவி, சிவகாமி இருவரும் ஏற்கனவே சாராய விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ரவிக்கு சொந்தமான குடிநீர் டேங்கரில் சாராய ஊறலை பதுக்கி வைத்து தினமும் தேவைக்கேற்ப எடுத்து வந்து அதில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதும் தெரிந்தது. பின்னர் கைதான 2 பேரையும் திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்