திருவள்ளூர் அருகே, கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன - ரசாயனத்தை கலந்தனரா? என விசாரணை
திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் திடீரென 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக குளத்தில் ரசாயனத்தை மர்மநபர்கள் கலந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதாவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த சிவன் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் கோவில் குளத்தில் ரசாயனத்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் குளத்தில் திடீரென செத்து மிதந்த நிலையில் காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.