முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

விருத்தாசலத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Update: 2020-04-27 22:05 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மேலும் 2 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில் மேலும் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் விருத்தாசலத்தை சுற்றிலும் 38 இடங்களில் ‘சீல்’ வைக்கப்பட்டு நகரம் முழுவதும் போலீசார், வருவாய்த்துறை மற்றும் நகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.பெரியார் நகர், ஜங்ஷன் சாலை, கடைவீதி, நீதிமன்றம் ஆகிய நான்கு இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து, நகர பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறாமலும், வெளிப் பகுதியில் இருந்து உள்ளே நுழையாமலும், தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வர்களுக்கு 3 வண்ணங்களில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டில் கூறப்பட்டுள்ள நாட்களிலேயே பொருட்களை வாங்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் வசூல்

இந்நிலையில் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றி திரிபவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலித்து எச்சரிக்கை விடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்பேரில் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கண்ட நான்கு இடங்களிலும் நகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் முகாமிட்டு அப்பகுதி வழியாக வரக்கூடிய பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர். இதில் நேற்று முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்