ஈரோட்டில் கொரோனா பரப்பியதாக கைதான 6 பேர் புழல் சிறையில் அடைப்பு; பெருந்துறை ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டனர்
ஈரோட்டில் கொரோனா பரப்பியதாக கைதான தாய்லாந்து நாட்டினர் 6 பேரை புழல் சிறையில் அடைக்க பெருந்துறை ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
ஈரோடு,
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா விசாவில் ஈரோடு வந்தனர். கொல்லம்பாளையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி மத பிரசாரம் செய்தனர். இவர்களில் 2 பேர் ஈரோட்டில் இருந்து மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். அப்போது 2 பேருக்கும் அங்கு இருந்த டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்தனர்.
அப்போது சிறுநீரக பாதிப்பால் ஒருவர் இறந்தார். அதைத்தொடர்ந்து மற்றொருவரும், ஈரோட்டில் தங்கியிருந்த 5 பேரும் என மொத்தம் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பின்னர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேரும் குணமடைந்தனர். மேலும், தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே ஈரோட்டில் கொரோனா தொற்றை பரப்பியதாக தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீதும் சூரம்பட்டி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆஸ்பத்திரியிலேயே போலீஸ் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு ஐகோர்ட்டு விசாரணைக்கு சென்ற நிலையில் வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அவர்கள் 6 பேரும் ஆஸ்பத்திரியிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த 24-ந் தேதி தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ஜாமீன் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
அதன்படி அரசு உத்தரவிட்டதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேரையும் போலீசார் நேற்று இரவு சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை கொண்டு சென்றனர்.