வெளியில் செல்ல அனுமதி அளிக்க கோரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம்

நம்பியூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் வெளிப்பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-04-27 23:00 GMT
நம்பியூர், 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அழகாபுரி நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது, இதைத்தொடர்ந்து அவர் கடந்த மாதம் 26-ந் தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் வீட்டை சுற்றிலும் உள்ள 83 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறவும், வெளியில் இருந்து அந்த பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் டாக்டர்கள், சுகாதார துறை பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ளவர்களை தினமும் மருத்துவ பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். அதுமட்டுமின்றி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்களுடைய பகுதியை விட்டு வெளியில் செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கப்பட்டன.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகமாக உள்ளதால், வெளியில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வர 2 மணி நேரம் அனுமதி தர வேண்டும் என கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் போராடினர்.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் வெங்கடேஷ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘உரிய நேரத்தில் சரியான பொருட்கள் சரியான விலையில் விற்க ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சுகாதார துறை அதிகாரிகள் அறிவுரையின் படி வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். 

ஆனால் தற்போது வரை இதுபோல் எந்த அனுமதியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இங்கு மே 8-ந் தேதி வரை தனிமைப்படுத்துதல் தொடரும். எனவே பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்