வெளியூர்களில் இருந்து சேலம் வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வெளியூர்களில் இருந்து சேலம் வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-04-27 23:00 GMT
கருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக சேலம் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதை தடுக்க மாநகரில் 9 இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றி வரும் 2 பேர் நேற்று தங்களது சொந்த ஊரான சேலத்துக்கு வந்தனர். அவர்களை மாநகர எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பிற மாவட்டத்தில் இருந்து வந்ததால் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா? என கண்டறிய கருப்பூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் தனிமைப்படுத்தினர்.

இதே போல் மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த 4 சுமைதூக்கும் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் மொத்தம் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 10 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்பது தெரியவந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேருக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்