தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருந்தால் நிவாரண உதவி: கலெக்டர் மெகராஜ் தகவல்
தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருந்தால் நிவாரண உதவி பெறலாம் என்று கலெக்டர் மெகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் அடையாள அட்டை வைத்திருப்போர் நிவாரண உதவி பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நலவாரிய அடையாள அட்டையை வைத்திருப்போர் மட்டும் தற்போது பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்று இருந்தாலும் சம்பந்தப்பட்ட நலவாரியத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அடையாள அட்டை வைத்திருப்போர் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளரின் dm-n-m-k-lt-a-h-d-co@ya-h-oo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அடையாள அட்டையின் விவரத்தை படம் எடுத்து அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.