விலை போகாத கேந்தி பூவால் வாடிய விவசாயிகள்

தூத்துக்குடி அருகே ஊரடங்கால் கேந்தி பூக்கள் விலை போகாததால் விவசாயிகள் வாடிப்போய் உள்ளனர்.

Update: 2020-04-27 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக பூக்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. அங்கு எங்கு பார்த்தாலும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கம்பளம் விரித்தாற் போன்று கேந்தி பூக்களும், சேவல் கொண்டை பூக்களும் காட்சி அளிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த பூக்கள் அதிக அளவில் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஒரு கிலோ கேந்திப்பூ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை முடங்கியது

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு உள்ளன. கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருமண நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் நடைபெறவில்லை.

இதனால் பூக்கள் விற்பனை முடங்கி உள்ளது. இதனால் அல்லிக்குளம் பகுதியில் உள்ள கேந்தி பூக்களும் வாடி வதங்க தொடங்கி விட்டன.

நிவாரணம்

வேறு வழியின்றி விவசாயிகள் குறைந்த விலைக்கு பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ கேந்திப்பூ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் செய்த செலவைகூட ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. பூக்களை பறிக்காமல் செடியிலேயே காய விட வேண்டிய சூழல்தான் உருவாகி உள்ளது.

இதனால் முகம் வாடிப்போய் உள்ள விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டு உள்ள இழப்புக்கு அரசு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்