சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது
சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்பிலியபுரம்,
சாராயம் காய்ச்சிய வழக்கில் தலைமறைவான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராய வேட்டை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால், மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனை சிலர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர். உப்பிலியபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வேட்டையில் 700 லிட்டர் சாராய ஊறல் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில், பச்சைமலை பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், குற்றவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் இதில் பங்கேற்றனர். அப்போது துறையூரை சேர்ந்த ஹரி, சொரத்தூரை சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரும் பச்சைமலை பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ஊராட்சி முன்னாள் தலைவியின் கணவர் கைது
இந்நிலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த கோம்பை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியின் கணவர் குண்டூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) மற்றும் சித்திரன் (45) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 500 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சாராய வேட்டையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதனையும், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனையும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
சமயபுரம்
இதேபோல, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நங்கமங்கலம் சத்திரம் மேலத்தெருவை சேர்ந்தஅரவிந்தன் (22) என்பவர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்று வருவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அரவிந்தன், வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.