அரசு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2020-04-27 03:35 GMT
பாகூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற மே 3-ந் தேதி வரை 40 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சில விதிமுறைகளுடன் விவசாயம், கட்டுமானம், சிறு, குறு நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 20-ந் தேதி முதல் இயங்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி புதுவை மாநிலத்தில் கிராமப்புற பகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகள், கம்பெனிகள் இயங்கி வருகிறது.

புதுவையின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அந்த மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அப்படி அந்த மாவட்டங்களில் இருந்து வருபவர்களை புதுச்சேரி எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருமாம்பாக்கத்தை அடுத்த கந்தன்பேட் என்ற இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், கடலூரை சேர்ந்த தொழிலாளர்கள் அரசின் விதிமுறைகளை மீறி வேலை செய்தது, அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள், கம்பெனிகளில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், காட்டுக்குப்பம், வார்க்கால் ஓடை பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடலூர், விழுப்புரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் யாரேனும் பணியில் ஈடுபடுகிறார்களா? என்று விசாரித்தார்.

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

கம்பெனியில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். இதன்பின் வார்க்கால் ஓடை கிராமத்தில் உள்ள கொசுவத்தி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஊழியர்கள் பலர் கையுறை அணியாமல் வேலையில் இருந்தனர். இதை பார்த்த போலீஸ் சூப்பிரண்டு, தொழிலாளர்களுக்கு முககவசம், கையுறை, கிருமிநாசினி வழங்கவேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்