நெல்லை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; 5 வீடுகள் இடிந்தது தென்னை, வாழைகள் நாசம்
நெல்லை அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து நாசம் அடைந்தன.
பேட்டை,
நெல்லை அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து நாசம் அடைந்தன.
சூறைக்காற்றுடன் மழை
நெல்லை பகுதியில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் மேக கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. சுத்தமல்லி, பேட்டை, குன்னத்தூர், கருங்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சுத்தமல்லியை அடுத்த தீன்நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாடசாமி வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இதேபோல் சிவா, ஏசுராஜ் ஆகிய 2 பேரது வீடுகளும் சேதம் அடைந்தன.
பனை மரங்கள் சாய்ந்தன
பேட்டை கருங்காடு ரோடு மயிலப்புரம் அருகே உள்ள கொம்பு மாடசாமி கோவில் பீடத்தின் மீது பனை மரம் சாய்ந்து விழுந்து. இதில் பீடம் சேதம் அடைந்தது. அருகில் உள்ள உய்காட்டு சுடலை கோவில் அருகே மற்றொரு பனைமரம் சாய்ந்து, அங்குள்ள ஆலமரத்தின் மீது விழுந்தது.
இதேபோல் கருங்காடு ரோட்டில் உள்ள தோட்டம் அருகே சென்று கொண்டிருந்த மின்கம்பிகள் மீது பனைமரம் சாய்ந்து விழுந்தது. இதில் மின்கம்பிகள் சேதம் அடைந்தன. அங்கு அமைக்கப்பட்டு உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலை பந்தலும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
தென்னை, வாழைகள் சேதம்
கருங்காடு, நரசிங்கநல்லூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தன. கதலி, சக்கை, செவ்வாழைகள் குலை தள்ளிய நிலையில் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. மேலும் 50 தென்னை மரங்களும் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.
இதேபோல் அந்த பகுதியில் விதைப்பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை காற்றில் பறந்து முற்றிலும் சேதம் அடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான மூட்டை நெல் விதைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.
விவசாயிகள் பாதிப்பு
சுத்தமல்லி பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மரங்கள் சாய்ந்ததாலும் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.