விக்கிரமசிங்கபுரத்தில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது
விக்கிரமசிங்கபுரத்தில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரத்தில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது.
சிறுத்தை அட்டகாசம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பாபநாசம் வனச்சரகத்தில் விக்கிரமசிங்கபுரம் அருகே கோரையார் குளம், வேம்பையாபுரம், செட்டிமேடு, திருப்பதியாபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்து உள்ளன. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய், ஆடு போன்ற விலங்குகளை வேட்டையாடி வந்தது.
இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூண்டில் சிக்கியது
உடனே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுத்தை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் பாதையில் வேம்பையாபுரத்தில் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தை சுமார் 2 வயது உடைய பெண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தையை வனத்துறையினர் காரையாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
இதற்கு முன்பு கடந்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி ஒரு பெண் சிறுத்தையும், கடந்த 12-ந் தேதி ஒரு பெண் சிறுத்தையும் பிடிபட்டன. அவற்றையும் வனத்துறையினர் காரையாறு வனப்பகுதியில் கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.