நெல்லை-தென்காசி நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு: அனைத்து கடைகளும் அடைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது.
நெல்லை,
நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட நகரசபை பகுதிகளில் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் சமூக விலகலை 100 சதவீதம் கடைபிடிக்கும் வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் திறக்க தடை விதிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு
அதன்படி நேற்று நெல்லையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை டவுன் ரதவீதிகளில் காலை நேரத்தில் மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக அங்குமிங்கும் செல்வார்கள். அப்போது பரபரப்பாக காணப்படும். ஆனால், நேற்று முழு ஊரடங்கால் டவுன் ரதவீதி வெறிச்சோடியது.
இதேபோல் பாளையங்கோட்டை மார்க்கெட், கடைவீதிகள், சந்திப்பு, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்களும் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். நெல்லை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒருசில வாகனங்கள் வந்தாலும், அந்த வாகனங்கள் உரிய அனுமதி பெற்று இயக்கப்படுகிறதா? என்று ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அனுமதி இன்றி, அவசர தேவையின்றி வெளியே வந்தவர்களை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருசிலருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.
50 தொழிலாளர்கள்
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் 50 பேர் வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில், சரக்கு ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை லாரியில் இறக்க செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அத்தியாவசிய பணி என்பதால் மேலும் 2 லாரிகளை வரவழைத்து தொழிலாளர்களை 3 லாரிகளில் பிரிந்து செல்லுமாறு கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெரு வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் வாலிபர்கள் சிலர் ஏறி நுங்கு பறித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் பறித்த நுங்குகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில்...
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகரசபை பகுதிகளிலும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தென்காசியில் வழக்கமாக காலையில் திறக்கப்படும் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரிகள், பூக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கப்பட்டு இருந்தன. அங்கு குறைவான மக்களே வந்து, இறைச்சி மற்றும் மீன்களை வாங்கிச் சென்றனர். மேலும் அங்குள்ள அம்மா உணவகமும் இயங்கியது. இந்த உணவகம் தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ளதால் அங்கு வந்தவர்கள் உணவகத்தில் சாப்பிட்டு சென்றனர்.
போலீசார் ரோந்து
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் யாரும் நேற்று வெளியே வரவில்லை. இதனால் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள், கூலக்கடை பஜார், தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ள பஸ் நிலையங்கள், மேம்பாலம் மற்றும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்தனர்.
செங்கோட்டையில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தேவையின்றி மக்கள் யாரும் வாகனங்களில் சுற்றித்திரியவில்லை. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
புளியங்குடி
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட புளியங்குடியில் ஏற்கனவே முழுஊரடங்கு போல் கட்டுப்பாடுகள் உள்ளன. வழக்கம்போல் நேற்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கடையநல்லூரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. வீடுகளில் மக்கள் அனைவரும் முடங்கினர். ஒரு சில இறைச்சி கடைகள் மட்டும் காலையில் சிறிது நேரம் இயங்கின. அதிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.