கர்நாடகத்தில் பசுமை மண்டலங்களான 10 மாவட்டங்களில் ஊரடங்கு வாபஸ் - பிரதமர் மோடியுடன் இன்று ஆலோசித்து எடியூரப்பா முடிவை அறிவிக்கிறார்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பசுமை மண்டலங்களான 10 மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) ஆலோசித்து இறுதி முடிவை அறிவிக்கிறார்.

Update: 2020-04-27 00:24 GMT
பெங்களூரு,

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் கர்நாடகம் 11-வது இடத்தில் உள்ளது.

இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதனால் ஊரடங்கு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 503 ஆக அதிகரித்துள்ளது. இதில் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். மற்ற மாநிலங் களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையில் நேற்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் 128 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

பசுமை மண்டலங்கள்

அந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து சேவைகளையும் அரசு துறை அதிகாரிகளே வழங்குகிறார்கள். அங்கு கொரோனா மேலும் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிக்காத பசுமை மண்டலங்களில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கர்நாடகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும் சிவமொக்கா, ராமநகர், ஹாசன், சாம்ராஜ் நகர், ஹாவேரி, ராய்ச்சூர், கோலார், யாதகிரி, கொப்பல், சிக்கமகளூரு ஆகிய 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதுபோல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற அரசு திட்டமிட்டு உள்ளது.

பிரதமருடன் இன்று ஆலோசனை

பெங்களூருவை பொறுத்தவரையில் கொரோனா பாதித்துள்ள வார்டுகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தும் மனநிலையில் அரசு இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவும் கலந்து கொள்கிறார்.

மோடி அனுமதி வழங்கினால்...

இதில் அவர், கர்நாடகத்தில் கொரோனா பாதிக்காத பகுதிகளில் ஊரடங்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த வைரஸ் அதிகமாக பரவியுள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அனுமதி வழங்கினால், கர்நாடகத்தில் வருகிற 3-ந் தேதிக்கு பிறகு பசுமை மண்டலங்கள் மற்றும் கொரோனா பாதித்த மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களிலும் ஊரடங்கு வாபஸ் பெறும் அறிவிப்பை எடியூரப்பா வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தில் ஏற்கனவே தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள், விவசாய பணிகள், கார், இருசக்கர பணிமனைகள் செயல்பட அனுமதி அளித்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்