திருக்கடையூர் அருகே மாற்றுப்பயிராக கொத்தவரங்காய் சாகுபடி
திருக்கடையூர் அருகே மாற்றுப்பயிராக கொத்தவரங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருக்கடையூர்,
திருக்கடையூர் அருகே மாற்றுப்பயிராக கொத்தவரங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை பகுதியை சேர்ந்த விவசாயிகள், கோடைகாலத்தையொட்டி அதிக அளவில் தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்க வராததால், விற்பனைக்கு தயாராக இருந்த தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்கள் பறிக்காததால் அழுகி வீணாகி விட்டன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து பெரும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
கொத்தவரங்காய் சாகுபடி
இதனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சிங்கனோடை பகுதியை சேர்ந்த விவசாயிகள், சுமார் 10 ஏக்கரில் மாற்றுப்பயிராக கொத்தவரங்காய் பயிரை சாகுபடி செய்துள்ளனர். இதற்கு டீசல் என்ஜின் மூலம் தண்ணீரை பாய்ச்சி பாதுகாத்து வருகின்றனர்.
இந்த பயிர் சுமார் 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் என்றும், கொத்தவரங்காய் உணவு மற்றும் வத்தல் செய்வதற்கு பயன்படுவதால் அதிக நாட்கள் பயன்படுத்த முடியும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இந்த கொத்தவரங்காய் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அதிக அளவில் விற்பனையாகும் என்றும் விவசாயிகள் நம்பியுள்ளனர்.