மே 3-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை தளர்த்த நிலைமையை ஆய்வு செய்து முடிவு - மாநில மக்களுக்கு உத்தவ் தாக்கரே உரை

மராட்டியத்தில் மே 3-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை தளர்த்துவது குறித்து நிலைமையை ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

Update: 2020-04-26 23:46 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நோய் பாதிப்பு இல்லாத மற்றும் குறைந்தளவு பாதிப்பு உள்ள பகுதிகளில் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாநில மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு தளர்வு

நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு மே 3-ந் தேதி முடிவடைகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து அடுத்த வாரம் நிலைமையை ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

மாநிலத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக முயற்சி எடுத்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறேன்.

நிதின் கட்காரிக்கு நன்றி

எந்தவொரு அரசியலிலும் ஈடுபட இது சரியான நேரம் அல்ல என்று அழுக்கு அரசியலில் ஈடுபடும் சிலரை மறைமுகமாக அறிவுறுத்தியதற்காக மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மில்லியன் கணக்கான நன்றிகள்.

கொரோனா நிலைமையை கையாள்வதில் மராட்டிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியதற்காகவும் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்