மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

Update: 2020-04-26 21:47 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நாளில் வைரஸ் சமூக தொற்றாக மாறக்கூடாது என்பதற்காக காலை, மாலை என 2 வேளை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

மேலும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

கலெக்டர் பார்வையிட்டார்

இதன்படி நேற்று முழு ஊரடங்கு உத்தரவு மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் நகராட்சியில் பாரதி சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜிரோடு உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த பணியை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பிளச்சிங் பவுடர் போட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதையடுத்து 8 நவீன எந்திரங்கள் மூலம் நகராட்சி பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

எச்சரிக்கை

தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன், நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது கல்கி நகர் பகுதியில், தூய்மை பணி மேற்கொண்டு கிருமிநாசினி தெளிக்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் பிரபாகரன் மற்றும் நகராட்சி ஊழியர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

இதேபோல் பட்டாம்பாக்கம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் சுகாதார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 100 சதவீதம் வரவில்லை. இதேபோல் வருகிற 3-ந்தேதி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். தேவைக்கேற்ப வெளியே வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆய்வின் போது கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம், தாசில்தார்கள் செல்வக்குமார், உதயகுமார், கீதா, கடலூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்