சேலத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

சேலத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-26 22:45 GMT
சேலம்,

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், 2 கர்ப்பிணிகள், தாய்-மகன் என 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் சுற்றுலா சென்றனர். இந்தநிலையில் அவர்கள் சேலம் வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று கோவிலுக்கு சென்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இதுதவிர கோவிலுக்கு சென்றவர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் சென்ற டிரைவர்கள் உள்பட 26 பேர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்