சமூக இடைவெளியை கடைபிடித்து நோன்பு கஞ்சி அரிசி வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
சமூக இடைவெளியை கடைபிடித்து நோன்பு கஞ்சி அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி,
ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியை சமூக இடைவெளியை கடைபிடித்து தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி ரெயில் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 200 பேருக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசு 5 ஆயிரத்து 450 டன் அரிசி வழங்கி உள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 29 பள்ளிவாசல்களில் 20 ஆயிரத்து 595 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிசி அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியை சமூக இடைவெளி கடைபிடித்து தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளிவாசல் நிர்வாகிகள் அரசின் உத்தரவினை கடைபிடித்து ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கும் அரிசியை தகுதியான குடும்பங்களுக்கு பிரித்து வழங்கி பயன்பெறுமாறு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், மாவட்ட சுன்னத் ஜமாத் செயலாளர் இக்பால், மாவட்ட முத்தவல்லி சங்கத் தலைவர் ஜப்பார், தாசில்தார் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.