ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் முன்னதாக தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிக்கை
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்க உதவ வேண்டும் என்றால் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார். இது குறிதது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்காசி,
சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்ட தொண்டு நிறுவனங்கள், தனிநபர், தனி நபர் குழுக்கள் மற்றும் அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
உணவு வினியோகம் பொறுத்த வரையில் சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அந்த உணவு தயாரிப்பவரின் உடல் நிலை குறித்தும், உணவின் தரம், உணவு தயாரிக்க கூடிய இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர் மேற்கண்ட விதமுறைகளில் திருப்தியடைந்த பிறகு மனுதாரர்கள் உணவு வினியோகத்தை தொடரலாம்.
ஹாட்ஸ்பாட்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உதரணமாக புளியங்குடி நகரசபை பகுதியில் உணவு வினியோகம் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட கால நேரத்துக்குள் உணவு வினியோகத்தை முடிக்க வேண்டும். சில இடங்களில் உணவு வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படும் என்று தெரிந்தால், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்கலாம்.
வினியோகிக்கும் இடத்துக்கு உணவுகளை கொண்டு செல்ல டிரைவர் உள்பட 4 பேர் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியே கடைபிடித்து உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.