புதுச்சேரியில், மேலும் ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று
புதுவை மூலக்குளத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் புதுவையில் 6 பேரும், மாகியில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் மாகியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் பலியானார். மற்றொருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரில் வசித்து வந்த பெண் உள்பட 3 பேர், மூலக்குளம், திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 3 பேர் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதை தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீதமுள்ள 3 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மூலக் குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் 18 வயது மகனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. அவர் வசித்து வந்த அன்னை தெரசா நகர் ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.