மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - நாராயணசாமி தகவல்

தாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-04-26 06:55 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். புதுவை மக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 2 நாட்கள் கடைகளை பூட்டி விட்டு அடுத்த நாள் தான் கடையை திறப்போம் என்று நானும் எச்சரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால் இது தொடர்பாக அரசு சார்பில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

ஆனால் சில விஷமிகள் சமூக வலைதளங்களில் கடைகள் மூடப்படுவதாக வதந்தியை பரப்பி விட்டார்கள். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். நாங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம். முடிவுகளை மக்களுக்கு தெரிவித்து விட்டு தான் நிறைவேற்றுவோம். மக்கள் கடைபிடித்தால் அது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவ்வாறு கடைபிடிக்காவிட்டால் வேறு முடிவு எடுப்போம்.

நாளை (திங்கட்கிழமை) பிரதமர் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பேச உள்ளார். அப்போது எனக்கும் பேச வாய்ப்பளிக்க கேட்டுள்ளேன். மற்ற மாநிலங்களை போல் தான் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு அரிசி, ஜன்தன் கணக்கு களில் பணம் போன்றவற்றை கொடுத்துள்ளது. அதேபோல் பட்ஜெட்டில் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் 4-ல் ஒரு பங்கு நிதியை தந்துள்ளது. ஆனால் கொரோனாவுக்கு என்று தனியாக நிதி எதுவும் வரவில்லை. இதை பிரதமர், உள்துறை மந்திரியிடம் நான் கூறியுள்ளேன். உள்துறை மந்திரியும் கூட்டம் நடத்தி முடிவு எடுத்து தருவதாக கூறி உள்ளார். ஆனால் சிலர் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி மாயையை உருவாக்கி வருகிறார்கள்.

மத்திய அரசு கடைகளை திறக்க சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த கலெக்டரிடம் கூறி உள்ளேன். அதாவது 50 சதவீத ஊழியர்களை கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி செயல்படும் கடைகளைத் திறக்கலாம். அந்த கடை ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டும். கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி, நகை, புத்தக கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் கலெக்டர் அறிவிப்பு கொடுப்பார். ஆனால் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதே போல் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ இலவச அரிசி வீதம் மூன்று மாதங்களுக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதற்கு கவர்னர் கிரண்பெடி சில நிபந்தனைகளை விதித்தார். இதன்படி இலவச அரிசி வழங்க மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து நான் மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பேசினேன். இது தொடர்பாக தலைமை செயலாளர் வழியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கடிதம் நமக்கு வந்துள்ளது. அதன்படி விரைவில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கப்படும்

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்