வேலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 650 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் - சித்த மருத்துவ அலுவலர் தகவல்
வேலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 650 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 22 பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மற்ற 19 பேரும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேரில் 21 பேர் வேலூர் கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், கருகம்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். அதையடுத்து அந்த பகுதிகள் கடந்த 18-ந் தேதி முதல் ‘சீல்’ வைக்கப்பட்டு, தனிமை மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த பகுதிகளின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் வாகனங்களில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதிகளை உதவி கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சித்த மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா மேற்பார்வையில் சித்தப்பிரிவு அலுவலர்கள் கடந்த சில நாட்களாக கபசுர குடிநீர் பொட்டலங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 கிராம் எடை கொண்ட 650 பொட்டலங்கள் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டன.
அவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள். அதன்படி சைதாப்பேட்டையில் 150 குடும்பங்களுக்கும், கொணவட்டம், சின்னஅல்லாபுரம், கஸ்பா, ஆர்.என்.பாளையம், கருகம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 100 குடும்பங்களுக்கும் என்று முதற்கட்டமாக 650 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கும் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்படும். இவற்றை தவிர மற்ற பகுதிகளில் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா தெரிவித்தார்.