கரூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்

கரூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

Update: 2020-04-26 04:32 GMT
கரூர், 

கரூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

நுங்கு விற்பனை

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று பனைமரம். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை வெல்லம், கற்கண்டு, கருப்பட்டி போன்றவை மருத்துவ குணம் கொண்டவை ஆகும். எவ்வித செலவும் வைக்காமல் தானாகவே வளரும் தன்மை கொண்ட பனை மரங்களில் இருந்து கிடைக்கும் நுங்குகள் கோடை காலங்களில் மக்களின் தாகத்தை தணிப்பதோடு முக பருக்கள், வியர்வை கட்டிகள் முதலான கடும் நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டவை.

இதனால் கோடை காலம் தொடங்கி விட்டால் கரூரில், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகமாக இருக்கும். தற்போது கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும், கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பொது மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். சிலர் தங்களது குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லி தருதல், ஓவியம் வரைய கற்று தருதல், குடும்ப உறவினர்களுடன் பேசுவதன் மூலம் பொழுதை போக்கி வருகின்றனர்.

விற்பனை அமோகம்

மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி உள்ளிட்ட வற்றை தேடி பிடித்து வாங்கி வருகின்றனர். அதிலும் நுங்கு எங்கு கிடைக்கிறது என்று விசாரித்து சென்று வாங்கி வருவதால் நுங்குக்கு அதிக வரவேற்பு உள்ளது. கரூரில், மூன்று நுங்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் ரூ.50, ரூ.100-க்கு நுங்கு வாங்கி செல்கின்றனர். இது குறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், நுங்கு உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதுடன் தாகத்தை தீர்க்கும் என்பதால் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். தற்போது பனை மரங்கள் குறைந்து வருவதால் நுங்கு கிடைப்பது சிரமமாக உள்ளது. என்றார்.

மேலும் செய்திகள்