உப்பிலியபுரம் பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை: 700 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் ஊராட்சி முன்னாள் தலைவியின் கணவருக்கு வலைவீச்சு

உப்பிலியபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 700 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-04-26 04:10 GMT
உப்பிலியபுரம், 

உப்பிலியபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 700 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் சோதனை

உப்பிலியபுரம் மற்றும் பச்சைமலை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், நேற்று உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், ஏட்டு முருகானந்தம், துறையூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் பச்சைமலைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன் (வயது 29) என்பவர் புத்தூரில் உள்ள வயல் பகுதியில் சாராய ஊறல் போட்டு இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர், 3 பிளாஸ்டிக் பேரல்களில் போட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

வழக்கு

இதேபோல, உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர சாராய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதில் கோம்பை ஊராட்சி முன்னாள் தலைவியின் கணவர் குண்டூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவர் சாராய ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 150 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான ராஜேந்தி ரனை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் நேற்று நத்தமாடிப்பட்டி, புங்கனூர், மால்வாய், டாப்செங்காட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்