நெல்லையில் இன்று முழு ஊரடங்கு: தடையை மீறி வெளியே வந்தால் கைது; வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்
நெல்லை மாநகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
நெல்லை,
நெல்லை மாநகரில் முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நெல்லை மாநகர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
கடைகளை திறக்க கூடாது
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க பிற துறைகளுடன் போலீஸ் துறையும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் இந்த ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. மாநகரம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளையும் திறக்கக்கூடாது. மருந்து கடைகளும், ஆஸ்பத்திரிகளும் மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
கைது நடவடிக்கை
பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். டாக்டர்கள், அரசு அத்தியாவசிய பணி ஊழியர்கள் மட்டுமே வெளியே வர அனுமதி உண்டு.
அதை விடுத்து மற்றவர்கள் தடையை மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்படுவார். நெல்லை மாநகரில் இன்று ஒரு நாள் மட்டுமே முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நெல்லையில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 10 பேர் மட்டுமே கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் உள்ளனர். எனவே, கொரோனா இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.