கொரோனா சமூக பரவலை தடுக்க மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு - கலெக்டர் அண்ணாதுரை அறிவிப்பு

கொரோனா சமூக பரவலை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update: 2020-04-25 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக பரவுவதை தடுக்கும் பொருட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாக மருந்து கடைகளை தவிர்த்து பலசரக்கு மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் எதுவும் இயங்காது. ஆகவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

விழுப்புரம் நகரில் காய்கறி மொத்த விற்பனையாளர்கள், மளிகை கடை வியாபாரிகள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் கடைகளை திறப்பது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினார்கள். அந்த நடைமுறையானது கொரோனா சமூக பரவலை தடுப்பதற்கு உகந்ததாக இல்லை என தெரியவருவதால் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த வண்ண அட்டைகள் முறையே சரியாக இருக்கும் என்பதால் அதனையே பின்பற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த வண்ண அட்டை நடைமுறையை மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வார்டு வாரியாக வழங்கப்பட்டுள்ள வண்ண அட்டைகளை பயன்படுத்தி விழுப்புரம் நகர மக்கள் வீட்டிற்கு ஒரு நபர் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லலாம். இந்த நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்