நிவாரணம் வழங்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
நிவாரணம் வழங்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
கரும்பு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். ஊரடங் கால் பாதிக்கப் பட்டுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அதிக நிவாரண நிதி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி மற்றும் கரும்புகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களது வீட்டின் முன்பும், நிலப்பகுதியிலும் கருப்பு கொடி ஏற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் காந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் ஆதவன், செயலாளர் நாராயணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் சார்பில் திட்டக்குடியில் விவசாயிகள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.