சரக்கு லாரியில் நாகை வந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை
மராட்டிய மாநிலத்தில் இருந்து சரக்கு லாரியில் நாகைக்கு வந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.;
நாகப்பட்டினம்,
மராட்டிய மாநிலத்தில் இருந்து சரக்கு லாரியில் நாகைக்கு வந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் தவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேலை காரணமாக வெளி மாநிலங்களில் தங்கி உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மராட்டிய மாநிலத்தில் தவித்து வருவதாகவும், அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சரக்கு லாரியில் வந்த வாலிபர்
இந்த நிலையில் நேற்று நாகை அருகே வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் நாகை புதிய நம்பியார் நகரை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் வந்தது தெரியவந்தது.
அவர் மராட்டியத்தில் இருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர் நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைக்கு பின்னரே அந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை
சரக்கு லாரியில் வந்த நாகை வாலிபர் கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுவனம் மூடப்பட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் வழியில் கிடைக்கும் வாகனங்கள் மூலமாக நாகை செல்ல திட்டமிட்டார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த 6 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.
50 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த நிலையில் அந்த வழியாக சரக்கு லாரி ஒன்று வந்தது. அதில் ஏறிய நாகை வாலிபர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் தமிழகம்-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி வந்தடைந்தனர். அங்கிருந்து மற்றொரு சரக்கு லாரி மூலமாக அவர்கள் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். இதன் பின்னர் மற்றொரு லாரியில் கும்பகோணம் வந்தனர். கும்பகோணத்தில் நாகை வாலிபர் தவிர மற்றவர்கள் லாரியில் இருந்து இறங்கி சென்றது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.